Tuesday, 19 July 2016

கிரீடம்




   இன்றைய தேதியில் நாற்பதிலிருந்து ஐம்பது வயதை எட்டியவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கொள்ளலாம். ஏனென்றால் பழைய வழக்கங்களும் சம்பிரதாயங்களும் தெரிந்த பெரியவர்களுடன் வாழ்ந்த அனுபவமும் தற்போதுள்ள கணினி உலகத்தில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறையுடன் வாழும் "பெரும்" பாக்கியமும் கிடைக்கப்பெற்றவர்கள். இந்த பழைய அனுபவங்களின் ஒன்றான  "தலை முடி" வெட்டும் வைபவத்தை நினைக்காமல் இருக்க முடியாது.  

               
ஒருவருக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கு பல காரணிகள் உண்டு. அதில் முக்கியம் வகிப்பது அதிகத் தலைமுடி வைத்திருப்பவர்களே. இதை நான் சொல்லவில்லை. இது பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்த எனக்கு புகட்டப்பட்டது. அது எப்படி இடுப்புவரை பின்னால் போடும் பெண்களுக்கு  என்ன ரிப்பன் போட்டால் ஜலதோஷம் வராதா? இல்லை ஜலதோஷம் என்ன ஆண்பாலுக்கு மட்டுமே சொந்தமா? பெண்கள் முடியை திருத்துவது மற்றும் "பார்லருக்கு" செல்வது அந்தக்காலத்து நடைமுறையில் வீட்டுக்கு ஆகாத ஒன்றாகப் பார்க்கப்பட்டது.எங்கள் கிராமத்தில் நாங்கள் முடி திருத்துவதற்காக வெளியே செல்ல மாட்டோம். வீட்டிற்க்கே வந்து நம் தலையில் "கை" வைத்து "மெஷின்" கட்டிங் முறையை எங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியதே "அப்பாவு" என்ற மஹாநுபாவர்.  அவருக்கு பரம்பரை நாவிதன் என்ற ஆஸ்தான பட்டம் உண்டு. எனக்கு பத்து அல்லது பதினோரு வயதிருக்கும்பொழுது எங்கள் ஊரிலிருந்து நாற்பது கி.மீ தொலைவிலுள்ள "பெரிய" கிராமத்தில் வசித்தோம். பெரிய கிராமம் என்று சொன்னதற்கு காரணம் மூன்று சினிமா தியேட்டர்கள்  மற்றும் மூன்று முடி திருத்தும் கடைகள் உண்டு. நான் முடிதிருத்தும் கடைக்கு ஆவலுடன் செல்லக்காரணம் அப்பாவுவின் "மெஷின்" கைவண்ணத்தில் தலை "வட்டுருப்பி"யாக மாறுவதைத் தடுக்கலாமே என்றுதான். வட்டுருப்பி என்றால் இந்தக்காலத்தில் "மஷ்ரூம்" கட்டிங் என்று அர்த்தம்.  ஆனால் நமக்கு பிடித்த மாதிரி முடி திருத்துவது அசாத்தியமே. 

          
தனியாக முடி திருத்தும் கடைக்கு செல்ல மட்டுமே எனக்கு  உரிமை உண்டு. பின்னர் அந்தக் கடையில் சுழல் நாற்காலியில் கைவைக்கும் இடத்தின் குறுக்கில் சங்கப்பலகை போட்டு அதன் மேல் உட்கார வைக்கப் படுவேன்.  பின்னர் முடி திருத்துபவர் என்னிடம் "மீடியமா" இல்லை "ஷார்ட்டா" என்று வெள்ளை நிற சால்வை போர்த்திக் கொண்டே கேட்பார். நான் எப்பொழுதும்போல் "மீடியம்" என்று சொல்வேன். அதற்கு அர்த்தம் தலையின் பச்சை தெரியாமல் சிறிது முடியை விட்டு வெட்டுவதுதான். முடிந்தவுடன்  அப்பாவுக்குத் தெரியாமல் பின் கதவு வழியே வீட்டிற்குள் நுழைய முயற்சிகள் நடக்கும். அவருக்குத் தெரியாமல் நான் குளித்து விட்டால் அந்த முறை தலை தப்பிக்கும். இல்லாவிட்டால்  அப்பாவுவின் கைக்கு தப்பிய தலை அப்பாவின் கைக்கு தப்பாது. அவர் மீண்டும் ஒரு முறை அனுப்பி விடுவார். நான் இரண்டு கி.மீ மீண்டும் நடந்து போய் முடி திருத்துபவரை "ஷார்ட்டா" வெட்டும்படி அழாத குறையாக முறையிட வேண்டும். அவர் ஏற்கனவே வாங்கிய ரூ2.50 க்கு இரண்டாவது முறை என்னை சங்கப்பலகையில் ஏற்றி முணுமுணுத்துக்கொண்டே என் தலையில் "பச்சை" காட்டுவார். பாதி பச்சை பாதி கருப்பு கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வதற்கு மனமே இருக்காது. என்னுடைய பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி முறையும் இருந்தது. அதில் நானும் எனது நண்பன் சிவகுமாரும் மட்டுமே நான்காவது மற்றும் ஐந்தாவது வகுப்பில் இருந்தோம். அதாவது மொத்தம் இரண்டு பேர் மட்டுமே!! சிவக்குமார் போலீஸ் கான்ஸ்டபிளின் மகன். அவன் எப்போதும் போலீஸ் "கட்"டுடன்தான் வருவான். அவனைப்பார்த்து நான் பெரும் ஆறுதல் அடைவதுண்டு.
இருபது வருடங்கள் கழித்து சென்னை வாசி ஆனவுடன் முடி திருத்தும் கடைகள் வீட்டினருகில் நிறைய இருந்தும் வேலை செய்யும் இடத்தின் அருகில் இருக்கும் கடை பழகிவிட்டது. ஒரு முறை முடி திருத்துவதற்கு  கிரீடம் இருக்குமிடம் பாதி கட்டாந்தரையாக இருந்தாலும் ரூ40 முதல் ரூ 70 ஆகும் வரை  பிரச்சினை ஏதுமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்  ஒரு சமயம் ஆண்களுக்கான அழகு நிலையம் என் வீட்டினருகில் புதிதாக ஆரம்பித்து அது மிகவும் பிரபலமான கடை என்று நிரூபிக்க சினிமா "ஷூட்டிங்" நடைபெற்றது. இதை பார்த்தவுடன் மனதில் ஒரு  எண்ணம். என்னுடைய கிரீடத்தை புதிய அழகு நிலையத்தில் திருத்தலாம் என்ற விபரீத முடிவு.

என்னுடைய வழக்கமான செலவு ரூ 70 இந்தக்கடைக்குப் பத்தாது என்று கூடுதலாக ஒரு ஐம்பது எடுத்துக் கொண்டேன். நான் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த சுழல் நாற்காலிகளை பார்த்து புதிய கடையின் நேர்த்தியை மனதுக்குள் பாராட்டினேன். யாருமில்லாமல் மூன்று நாற்காலிகள் இருந்தன. நான் ஒன்றில் அமரும் வரை கடையில் யாரும் இல்லை. பிறகு ஒருவர் வந்தார். என்னுடைய தலையை ஆராய்ந்து பின்னர் உங்களுக்கு பொடுகு நிறைய இருக்கிறது. இதனால் தான் உங்கள் முடி வேகமாக உதிர்கிறது. இதற்கு  உங்கள் முடியை திருத்திய  பின்னர் "ஆயில் " மசாஜ் செய்தால் உடனடி நிவாரணம் என்று பரிந்துரைத்தார். நான் சரி என்று ஆட்டுவதற்குள் என்னுடைய தலையை நாற்காலிக்கு எதிரே உள்ள தண்ணீர் வரும் குழாயில் நனைத்து "ஷாம்பூ" போட்டார். பின்னர் அலசி விட்டு ஒரு தட்டில் கத்தி மற்றும் கத்தரிக்கோல் வைத்து என்னருகில் நின்று கொண்டார். 

நான் கையையோ கத்திரிக்கோலையோ தலை மீது எதிர்பார்த்த வேளையில் உள்ளிலிருந்து ஒருவர் வெளிப்பட்டார். அவர் தன் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தார். இரு கைகளிலும் கையுறைகள் அணிந்திருந்தார். வேகமாக வந்து என்னருகில் ஏந்திய தட்டிலிருந்து கத்தியும் கத்திரிக்கோலையும் எடுத்து தன் வேலையை ஆரம்பித்தார்.
பத்து நிமிடங்களுக்கு பிறகு (உண்மையில் அப்பொழுது கொஞ்சம் திருத்தும் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது) உள்ளிருந்து சுடச்சுட தேங்காய் எண்ணெய் ஒரு தனி தட்டில் வந்தது. அதை என் தலையில் கவிழ்த்தி தேய்த்தார். பின்னர் ஒரு ஈரத்துவாலையால்  என் தலையை சுற்றிக் காட்டினார்.அந்தத் துவாலையும் சூடாக இருந்தது.  பின்னர் அவர் கையுறைகளையும் முகமூடியை யும்   அவிழ்த்து விட்டு உள்ளே சென்று விட்டார். . எனக்கு இதெல்லாம்  வினோத அனுபவமாக இருந்தது.. எனக்குள் குறுகுறுவென்று ஒரு எண்ணம். பையில் வைத்திருக்கும் பணம் பத்துமா என்று? பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு முதலில்  என்னைக் குளிப்பாட்டியவர்  மறுபடியும்  வந்து துவாலையை அவிழ்த்து "ஷாம்பூ" போட்டு தலையை அலசினார்.
ஒரே நாளில் இரண்டு முறை ஷாம்பூ குளியல் அதுவும் வேறொருவர் தலையை தேய்த்து அலசுவது நல்ல சுகமாகவே இருந்தது. இதன் பின் தலையை காய வைப்பதற்கு மின்னுலர்த்தி (hair dryer) உபயோகப்படுத்தப்பட்டது.  நான் மிகவும் மனம் குளிர்ந்து இருக்கும் பணம் முழுவதையும் கொடுக்க முடிவெடுத்தேன். 

       

பின்னர் வேறொரு தட்டில் சேவைக்கான "பில்" வந்தது. அதில் மொத்தம் ரூ.375/ என்று கடைசி வரியைப் பார்த்தவுடன் ஒரு இனந்தெரியாத பயம் கவ்விக்கொண்டது. என்னிடம் உள்ள ரூ.150/-ஐ கொடுத்து விட்டு மையமாக விழித்தேன். நான் பிறகு வந்து கொடுக்கலாமா என்று கொஞ்சம் பம்மிய குரலில் கேட்டேன். அதற்கு பில்லை நீட்டியவர் நீங்கள் முதல் முறையாக இங்கு வந்ததற்காக பாக்கியை தள்ளுபடி செய்கிறோம், நீங்கள் அடிக்கடி வர வேண்டும் என்று மலர்ந்த முகத்துடன் கூறினார். நான் வெகு நாட்களுக்கு அந்த கடையின் வாசல் பக்கம் தாண்டி போக முயற்சிக்கவில்லை.
இப்போதெல்லாம் என்னுடைய பாலைவனத்தின் நடுவிலிருக்கும் சோலையை திருத்துவதற்கு  ரூ.100/- ஐ   தாண்டி கொடுப்பதில்லை.  



No comments:

Post a Comment