Saturday, 30 April 2016

லாரி (பயணக்கட்டுரை)



      பிரயாணம் செய்வது எனக்குப்பிடித்தமான ஒன்று. அதிலும் ரயிலிலோ அல்லது பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஜன்னலோரம் அமர்ந்து  வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வது எவ்வளவு வயதானாலும் ஆவல் குறையாது. கேரள மாநிலம் கோட்டயத்தில் ஒரு அவசர அலுவல். சென்னையிலிருந்து கோட்டயம் செல்வதற்கு மிக எளிதான வழி,  இரவு திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஏழு மணிக்கு ஏறினால் காலை எட்டு மணிக்கு கோட்டயத்தில் சென்றடையும். ஆனால் அதற்கு இந்த மனம் இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால் கேரளத்தின் மலைச்சாரலில் பேருந்தில் செல்லும் சுகம் வேறெதிலும் கிடைக்காது. என்னுடைய சொந்த ஊரான கூடலுரைத்தாண்டி  குமுளி மலையை கடந்து மூன்று மணி நேர மலைப்  பயணம்  கோட்டயம்.
சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு  ரயிலில் சென்று காலையில் அடைந்து பின்னர் காலைச் சிற்றுண்டி முடித்து மதுரை சபரிமலை செல்லும் பாதையில் தமிழ்நாட்டின் கடைசி கிராமமான கூடலூர் செல்லும் பேருந்தைப் பிடித்தேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டிலிருக்கும் பேருந்து சேவை நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லை. நகரப்பேருந்துகளை விடுத்து கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை முதல் இரவு வரை உள்ள சேவை (பேருந்துகளின் தரத்தை நோக்காமல்) இன்றும் நம் சட்டைக்காலரை உயர்த்திச் சொல்லலாம் "நம் மாநிலம் மற்ற மாநிலங்களை விட பொது போக்குவரத்துத் துறையில் முன்னிலையில் உள்ளது " என்று. இதை மனதில் வைத்து கேரள மாநிலத்திலும் அதே போல் இருக்கும் என்று (தப்பு)  கணக்குப் போட்டு பிற்பகல் கூடலூர் சென்றடைந்தேன். அங்கு மதிய உணவு.
பின்னர் சிறு உறக்கம். மாலை ஆறு மணிக்கு கூடலூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் அங்குள்ள நேரக் குறிப்பாளர் (time keeper) மதுரையிலிருந்து (நான் கிளம்பிய இடம்) நேர் பேருந்து கோட்டயத்திற்கு செல்லும் வழியில்  எட்டு மணிக்கு இங்கு வரும். நீங்கள் குமுளிக்குச் சென்றால் பேருந்து கிடைப்பது அரிது என்று முதல் குண்டை அனாயாசமாக வீசினார். குமுளி என்ற ஊர் தமிழக கேரள மாநிலங்களின்  எல்லை. அங்கிருந்து கேரள மாநிலப் பேருந்தோ அல்லது தனியார் வண்டியோ பிடிக்க வேண்டும்.  நான் சற்றே சமாளித்து சரி என்று தலையாட்டினேன்.
நேர் வண்டி எட்டு மணி சுமாருக்கு நிஜமாகவே வந்த பொழுது அதில் அமர்ந்து செல்லும் பயணிகள் தவிர நின்று பயணிக்கும் பயணிகள் வேறு இருந்தனர், நடத்துனர் என்னைப் பார்த்து உங்களுக்கு இடமில்லை என்று அடுத்த குண்டைப் போட்டு கதவடைத்தார். நான் காலை எட்டு மணிக்காவது  கோட்டயத்தில் இருந்தாக வேண்டும். ஒரு கணம் திகைத்து பின் அடுத்து வந்த குமுளி வண்டியில் ஏறி அமர்ந்தேன். நேரக் குறிப்பாளர் கூறியது ஒரு வேளை தவறாக இருந்தால் குமுளியில் பேருந்து கிடைக்குமே என்று. செக் போஸ்ட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கிய பொழுது மணி ஒன்பது.
இரவு செல்லும் பேருந்து மற்றும் ஜீப் டாக்ஸி இவற்றை விசாரித்து கோட்டயத்திற்கு  இல்லை என்ற பதில் கிடைப்பதற்குள் நான் குமுளி வந்த (தமிழ்நாட்டு) கடைசி பேருந்து திரும்பிச் சென்று விட்டது. அப்போதுதான் நான் திரிசங்கு நிலையை அப்பட்டமாக அனுபவித்தேன். செக்போஸ்ட்  அருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்து "கட்டஞ்சாயா"வின் சுவையை  முதல் முறையாக என் நாக்கு அறிந்து கொண்டது. "சாயா"வின் மகிமை என் மூளையை சற்று கசக்கி உலுக்கியது. அடுத்து நான் என்ன செய்வது என்று பலவாறாக சிந்தித்துக்கொண்டிருக்கும்  வேளையில் சாயாக் கடையில் இரு லாரி ஓட்டுனர்கள் பேசுவது என் காதில் தற்செயலாக விழுந்தது. ஒருவர் செங்கனாசேரிக்கும் மற்றொருவர்  எரனாகுளத்திற்கும் தங்கள் சரக்கோடு போய்க்கொண்டிருந்தார்கள்.
நான் ஒருவரிடம் சென்று "கோட்டயம் செல்லும் லாரி ஏதாவது உள்ளதா? நான் கொஞ்சம் அவசரமாக போக வேண்டும்" என்று கேட்டேன்.
 செங்கனாசேரி செல்பவர் என்னிடம் "விருப்பமிருந்தால் என்னுடைய   லாரியில் அங்கமாலி வரை வரலாம். அது கோட்டயத்திலிருந்து 15 கி.மீ  முன்னால் உள்ளது. நீங்கள் அங்கிருந்து லோக்கல் பேருந்து பிடித்து கோட்டயம் போகலாம். அதற்கு பத்து ரூபாய் ஆகும் பரவாயில்லையா?"
நான் "எப்போ போய் சேருவீங்க?  காலை எட்டு மணிக்கு கோட்டயத்தில் இருக்கணும்".
"காலை 5 மணிக்கெல்லாம் அங்கமாலி போயிறலாம்" என்றார் ஓட்டுனர்.

நான் என்னுடைய அதிர்ஷ்டத்தை நினைத்து மிக மகிழ்ச்சியடைந்தேன், நான் அனுபவிக்கப்போவதை அறியாமல். பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு கைமாறியது. ஓட்டுனர் சிம்மாசனத்தின்  பின்புறம் ஒரு படுக்கை இருந்ததது. கிளீனர் என்ற உதவியாளரை    உட்கார்ந்தே வரும்படி ஓட்டுனர் கூறினார். நான் உறங்கிக்கொண்டே செல்லும் "பெர்த் " வசதி பத்து ரூபாய்க்கு கிடைத்ததும் குஷியாக ஏறி அதில் படுத்துக்கொண்டேன். என்னுடைய முகம் ஓட்டுனரின் கண்ணாடிக்கு நேரே இருந்தது. லாரி பத்தரை மணியளவில் குமுளியிலிருந்து கிளம்பியது. முதல் லாரிப் பயணத்தின் பரபரப்பு என்னை சற்று உற்சாகமடைய செய்தது. உறக்கம் வர நேரம் பிடித்தது. ஆனாலும் குளிர்ந்த ஆரோக்யமான காற்று நான் எடுத்த முடிவை ஆதரித்துத் தாலாட்டியது. சற்றே கண்ணசைந்த நேரம் லாரி ஓரிடத்தில் நின்றது. மணி பனிரெண்டு.
"இது என்ன ஊர்? - இது நான்.
இது குட்டிக்கானம் , வாங்க ஒரு சாயா குடிப்போம்  - இது ஓட்டுனர்
நான் மறுப்பேதும் சொல்லாமல் இறங்கி மறுபடியும் ஒரு கட்டஞ்சாயா குடித்தேன். இது ஓட்டுனர் கணக்கு.  நான் லாரியில் ஏறிப் படுத்தபின்தான் என்னுடைய தவறை உணர்ந்தேன். சாயா குடித்தால் உறக்கம் வருவதற்கு சற்று நேரம் ஆகும். ஒரு ரூபாய் மிச்சம் என்று மனதிற்குள் ஒரு  அல்ப சந்தோஷத்தினால் அதை பொருட்படுத்தவில்லை. குட்டிகானத்தை பற்றி ஒரு தகவல். இந்த சிற்றூர் மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறது. அதனால் காற்று பெரும் இரைச்சலுடன் வீசும். சரக்கு லாரிகளை சர்வ சாதாரணமாக ஆட்டும் அளவுக்கு அதற்கு பலமுண்டு. குறைந்த சரக்குடன் வரும் லாரிகள் இதன் காரணமாக குட்டிக்கானத்தில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்லும். நம்முடைய லாரியில் முழு லோடு இருந்ததால் ஓட்டுனர் காற்றைப் பொருட்படுத்தாமல் கிளம்பினார். இப்பொழுது ரம்மியமான பயணம் ஆரம்பித்தது. காற்றில் உள்ள மூலிகை மற்றும் பச்சைத் தாவரங்களின் மென்மையான வாசம் நான் எடுத்த இந்த பயண வழியை சரி என்று ஆமோதித்தது. ஓட்டுனர் அயராமல் பீடி புகைத்த வண்ணம் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று மேக மூட்டமாக மூடுபனி சூழ்ந்து விட்டது. கண்ணாடியில் வெள்ளித்திரை போட்டு மறைத்தது போல் இரண்டடிக்கு மேல் சாலையில் பார்க்க முடியவில்லை. எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது, ஏனென்றால் ஓட்டுனர் வண்டியின் வேகத்தை எள்ளளவும் குறைக்காமல் மலைப்பாதையில் வளைந்து வெள்ளித் திரையைக் கிழித்து ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அவருக்கு மிக பரிச்சயமான பாதை போலும்.
நான் " கொஞ்ச நேரம் ஓரமாக நிறுத்திவிட்டு பின்னர் போகலாமே" என்றேன் கலவரத்துடன்.
"நிறுத்தினாதான் வண்டிக்கு ஆபத்து. நீங்க பாட்டுக்கு கண்ணை மூடித் தூங்குங்க. ஒரு பீடி வேணுமா? நல்ல தைரியத்தைக் கொடுக்கும்" என்றார் ஓட்டுனர்.
"எனக்கு பழக்கமில்லே. நான் தூங்க முயற்சி பண்றேன்".
ஓட்டுனர் பலமாகச் சிரித்தார். பின்னர் கண்ணை இறுக்கி மூடித் தூங்க நினைத்தேன்.  காற்று இதமாக வீசினாலும் இந்த மூலிகை மற்றும் தாவர வாசம் என்னை மறுபடியும் எழுப்பிக் கொண்டே இருந்தது.
இரவு இரண்டு மணி சுமாருக்கு மறுபடியும் லாரி ஒரு மலைப்பாதை சாயா கடையில் நின்றது. இப்பொழுது மேகமூட்டம் விலகியிருந்தது. நான் கட்டஞ்சாயாவின் பக்தனாகிவிட்டேன். என்னுடைய படபடப்பு அடங்க அது மிகவும் உதவியது. இன்னும் நாலு மணி நேரப்பயணம் பாக்கி உள்ளதே!!
இந்தப்பயணம் சம்பவம் ஏதுமின்றி கழிந்தது.  5.30 மணி பொழுது புலரும் நேரம் நான் விழித்துக்கொண்டேன்.  இன்னும் மலைப்பாதை வழியாக போய்க்கொண்டிருந்தோம். ஓட்டுனரின் பின்னே உட்கார்ந்து சாலையின் இருபுறமும் உள்ள பச்சை நிற இயற்கையை ரசித்த வண்ணமிருந்தேன்.
" நல்ல உறக்கமா?    ரொம்ப பயந்துட்டீங்க போல இருக்கு" என்று விசாரித்தார் ஓட்டுனர்

"இல்ல. எனக்கு லாரியில போயி பழக்கமில்ல அதுதான்" என்று சமாளித்தேன். "நீங்க எப்படி தூங்காம லாரி ஓட்டறீங்க"
பாக்கெட்டிலிருந்து பீடிக்கட்டை காண்பித்தார். "இதுதான் எனக்கு எல்லாம். இத பத்த வெச்சு ஒரு இழுப்பு இழுத்தா ஒரு மணி நேரம் எனக்கு தெம்பா இருக்கும். இது சாதா பீடி இல்ல. உள்ள வேற தூள் (கஞ்சா) இருக்கு. இந்தாங்க உங்களுக்கு வேணா ஒண்ணு தரேன்" என்றார் பெருந்தன்மையோடு.
நான் அவசரமாக " உங்களுக்கு அதிகம் தேவைப்படும். காஸ்ட்லியான பீடி" என்று மறுத்தேன்.
பிறகு நான் ஆறேகால்  மணிக்கு செங்கனாசேரி பிரிவில் இறங்கும் வரை அவர் பேசவில்லை.
நான் நன்றி தெரிவித்து இறங்கியபின் "காஸ்ட்லி எல்லாம் இல்லைங்க. இந்த லாரி முழுவதும் இந்த சரக்குதான்" என்று பெரிதாக சிரித்து வேகமாக கியரை மாற்றி வண்டியைக் கிளப்பினார் ஓட்டுனர். 
கோட்டயம் செல்லும் சிற்றுந்து உடனே கிடைத்து அதில் ஏறி அமர்ந்த போது இரவு முழுவதும் வந்த மூலிகை வாசனைக்கு எனக்கு அர்த்தம் புரிந்தது.