Sunday, 3 September 2017

ஏழு



ஏழு ஜாடித் தங்கம் (ராமக்ருஷ்ண பரமஹம்சர்)
  ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்),  உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை.
ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. முகம் வாடியது, உடலும் மெலிந்தது இவனது நடத்தையில் மாற்றம் வந்தது ராஜாவுக்கும் தெரிந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். ஒரு வேளை நாடே சீர் கெட்டுப் போய்விட்டதோ என்று ராஜாவை வேறுவகை பயம் பிடித்துக்கொண்டது.. இவன் எவ்வளவு கேட்டும் சொல்லாமல் எப்போது
பார்த்தாலும், கூடக் காசு வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘’ஏ, சனியனே, என்ன? எங்கேயாவது ஏழு ஜாடித் தங்கத்தை எடுத்து வந்து விட்டாயா?’’ இப்படிப் பணத்துக்காக பேயாகப் பறக்கிறியே!’’ என்று திட்டினார்.
நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது, ‘’ராஜா, மன்னித்துவிடுங்கள், புதையல்
கிடைத்ததை உங்களிடம் சொல்லவில்லை. மன்னித்துவிடுங்கள். வீட்டுக்கு ஓடிப்போய் கொண்டுவந்து 7 ஜாடி தங்கத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன் என்றான் நாவிதன்.
ராஜாவோ, சிரித்துக் கொண்டே,இதே யட்சன் ஒரு நாள் ஏழு ஜாடித் தங்கத்தை எனக்குத் தருவதாகச் சொன்னான். இது வரவுப் பணமா? அல்லது செலவுப் பணமா? என்று கேட்டேன்.
அதாவது அந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியதா? அல்லது புதைத்து வைக்க வேண்டியதா? என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.
உடனே யட்சன் ஒரு பதிலும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டான்.அந்தப் பணத்தை(தங்கத்தை) யாராலும் செலவழிக்க முடியாது என்பது உனக்குத் தெரியாதா?
மஹாலட்சுமி தரும் ஐஸ்வர்யத்திற்கும்,யட்சனாகிய குபேரன் தரும் ஐஸ்வர்யத்திற்கும் வித்தியாசம் உண்டு.மஹாலட்சுமி தரும் பணத்தை(தங்கத்தை & செல்வ வளத்தை) செலவழிக்க முடியும்.
ஆனால்,யட்சனாகிய குபேரன் தரும் பணத்தை உன்னால் செலவழிக்க முடியாது;
அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தரும். ‘’அந்த ஏழு ஜாடி தங்கத்தை இங்கே கொண்டுவந்து விடாதே. ஓடிப்போய் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு’என்றார்.
அதைக் கேட்டதும் நாவிதனுக்குப் புத்தி வந்தது.உடனே அவன் யட்சன் வாழும் மரத்தின் அருகே சென்றான்.
“
யட்சனே,உன் தங்க ஜாடிகள் எனக்கு வேண்டாம்.நீயே எடுத்துக் கொள்” என்றான். “நல்லது அப்படியே ஆகட்டும்”
என்று யட்சன் பதிலளித்தான்.அடுத்த நிமிடமே நாவிதன் அவசரமாக தன் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தான்.மாயமாக வந்த ஜாடிகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.
நாவிதன் தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான்.ஜாடிகள் மட்டுமா மறைந்தன; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த அத்தனை செல்வமும் அல்லவா கையை விட்டுப்போய்விட்டது.
அவைகளை மறுபடியும் சேர்க்க இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன் குடும்பத்தாரும் கடினமாக உழைக்க வேண்டுமோ? என்ற கவலையும் பயமும் அவனை மிகவும் வாட்டியது.
பேராசை பெருநஷ்டம்;கடினமான உழைப்பினால் அடைந்த செல்வம் தான் தங்கும்;
மற்றவை மழையில் நனையும் மண்கட்டியைப் போல கரைந்துவிடும் என்ற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.
தங்கத்தின் மீது ஆசை வந்துவிட்டால் தூக்கம் போய்விடும்;சாப்பாடு பிடிக்காது;மனம் வேறு எந்த ஒன்றிலும் லயிக்காமல் போய்விடும்;
நிறையாத ஏழாவது ஜாடி என்பது மனிதனின் பேராசையைக் குறிக்கும். அது எப்போதுமே நிறையாதது என்ற உண்மையை இந்த நிஜச்சம்பவத்தின் மூலமாக ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவரித்திருக்கிறார்

No comments:

Post a Comment