எட்டு லட்சுமிகளின் கதை
போஜராஜன் அரசாட்சியில் எட்டு லட்சுமிகளின் அருள் இருந்ததால் பயமோ, பஞ்சமோ இன்றி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் போஜன் ஒரு தவறு செய்துவிட்டதால் எட்டு லெட்சுமி களுக்கும் கோபம் வந்துவிட்டது.
போஜ ராஜனே! உன் பிழை கண்டு வருந்துகிறோம்; நாங்கள் போய் வருகிறோம் என்று தன, தான்ய, தைர்ய, வீர, விஜய, வித்யா, கஜ, சந்தான லெட்சுமிகள் அறிவித்தனர்.
போஜனோ
“சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே — என்பது ஆன்றோர் வாக்கு ஆயிற்றே. “எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
அடியேன் எத்தனை பிழை செயினும் பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்” – என்று சான்றோர் பாடுகின்றனரே. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று முறையிட்டான்.
உடனே எட்டு லெட்சுமிமார்களும் “ஒரு வரம் தந்தனம். எங்களில் ஒருவரை மட்டும் கொள்க” என்றனர்.
புத்தியுள்ள போஜன் சொன்னான்: எனக்குத் துணிவு இருந்தால் உலகத்தையே வென்றுவிடுவேன். ஆகையால் தைர்ய லெட்சுமி என்னிடம் இருக்கட்டும் என்றான்.
அவர்களும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று இயம்பினர்.
மறுநாள் காலையில் போஜ ராஜனுக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.
தைர்ய லெட்சுமி இருந்த இடத்தில் வீர, விஜய, வித்யா லெட்சுமிகள் நுழைந்தனர். எங்கே துணிவு இருக்கிறதோ அங்கே தான் நாங்கள் இருப்போம் என்றனர். அதையடுத்து தன, தான்ய, சந்தான, கஜ லெட்சுமிகளும் உள்ளே வந்தனர். எங்கே கல்வியும் (வித்யா) தைர்யமும், வெற்றியும், வீரமும் இருக்கிறதோ அங்கே தான் தன, தான்யம், பிள்ளைப்பேறு (சந்தானம்), கஜலெட்சுமி (அதிர்ஷ்டம்/ லாபம்) இருப்போம் என்று ஓதினர். போஜனுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர்களைப் போற்றித் துதிபாடினான்.
இன்று கல்வியிலோ, தொழிலிலோ, அரசாட்சியிலோ , அலுவலகத்திலோ, குடும்பப் பொறுப்பிலோ உள்ளோருக்கு இந்தக் கதை தரும் அறிவுரை ஆயிரம் புத்தகங்களிலும் காணக்கிடைக்காத அற்புத அறிவுரை ஆகும்.
-------------------------
No comments:
Post a Comment