பழையதும் புதியதும்
அவன் ஒரு
"அதி புத்திசாலி" என்று எல்லோராலும் புகழப்பட்டவன். சென்னையில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதிக் கம்பனியில் உயர்பதவியில்
இருப்பவன் நம் நாயகன்
நமச்சிவாயம். . ஞாபக சக்தி
சற்று அதிகமாகவே படைத்தவன். அதீத முன்கோபக்காரன் . தன்னுடைய
ஞாபக சக்தியே தனக்கு குழப்பங்களை
வாழ்வில் கொடுக்கும் என்று அவன் எதிர்பார்த்ததில்லை.
"
நான் சொன்னது உனக்கு சரியாக புரியவில்லையா?”
நமச்சிவாயம் தன் மனைவி வசந்தியிடம் முகம் சிவக்கக்
கத்தினான். வசந்திக்கு அயர்ச்சியில் என்ன சொல்வதென்று புரியவில்லை. திருமணமாகி பதினைந்து
வருடங்கள் ஆகியும் தன் கணவன் இப்படி சிறிய விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவதை அவளால் ஒன்றும்
செய்ய முடியவில்லை. அப்படிக் கோபப்படும்போது பதினான்கு வருடத்திற்கும் முன் மணமான புதிதில்
செய்த அறியாத் தவறுகளையும் தேதி மற்றும் நேரம் வாரியாக அடுக்கி ஆரம்பித்து விடுவது
வாடிக்கை. இது போகப்போக சரியாகி விடும் என்று நினைத்தது மிகப்பெரிய தப்புக்கணக்கு. இப்போது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ஒரு நண்பனின்
இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று வர டிக்கெட் வாங்கக் கூறியிருந்தான் அவன்.
"நான் நீங்க
சொன்னது போலத்தான் செஞ்சேன். என்னுடைய சொந்த
அபிப்ராயத்துக்கு உரிமையே இல்லையா? குழந்தைகளுக்கு கூடுதலாக இரண்டு நாள் லீவு இருந்ததால திருநெல்வேலியிலிருந்து முப்பது கி.மி தொலைவில் கிராமத்திலிருக்கும் என்னோட அப்பா அம்மாவை பார்த்து வர நானே முடிவெடுத்தேன்.
திரும்பி வரும் நாள் சனிக்கிழமையாக இருந்ததால் டிக்கெட்டை இரண்டு நாள் கழித்து மாற்றி எடுத்தேன்”.
அதற்கு அவன், "இப்படித்தான்
உங்க குடும்பமே என்னை மதிப்பதில்லை, நான் ஒன்று சொன்னால் நீங்க ஒன்று செய்வீங்க. உங்க
அப்பா எட்டு வருஷத்திற்கு முன்னால மே மாசம் ஆறாந்தேதி என்னை அவமதிச்சுட்டார். உனக்கு
ஞாபகம் இருக்காது. எனக்கு மறக்குமா?
"
ஆறு வருஷத்துக்கு முன்னால ஆகஸ்ட் மாசம்
இருபதாம் தேதி உங்க சித்தப்பா நாலு பேருல ஒருத்தர் வீட்டு காதுகுத்துக்கு மாப்பிள்ளைன்னு
மரியாதை இல்லாம தபாலில் பத்திரிக்கை அனுப்பினாரு. அப்புறம் ஏன் என் மகளையும் பேரக்குழந்தைகளையும்
அனுப்பலைன்னு போன் போட்டு மிரட்டினாரு. அதுக்கு அடுத்த மாசம் மூணாந்தேதி ஞாயிற்றுகிழமை
சாயந்திரம் நாலு மணிக்கு உங்க உள்ளூரு அத்தை எனக்குத் தெரியாம உனக்கு போன் போட்டு என்னைப்பத்தி
மரியாதைக் குறைவாக பேசினாங்க".
"இது ஏன்?
நமக்கு கல்யாணம் ஆன போது உங்க வீட்டில ஒரு தொங்கட்டான் போட்ட கிழவி மத்தியானம் மூணு
மணிக்கு மாப்பிள்ளைக்கு நிலையான உத்தியோகம்தானான்னு
வெத்தல உரல இடிச்சிக்கிட்டே கேட்டா. ஏன் சீரெல்லாம் வேண்டாம்னுட்டாறு. உடல்ல ஏதாச்சும்
கோளாறான்னு உங்க ஒண்ணு விட்ட மாமா முதலிரவுக்கு போறதுக்கு முன்னாடி ராத்திரி ஒம்பது
மணிக்கு எனக்கு காதுல கேக்கும்படியா பின்னாடி பேசினாரு". என்று அடுக்கிக் கொண்டே போனான்
"நீங்க ஏன்
பழைய கதையை விடமாட்டேங்கறீங்க. பழச மறந்தாதான் புதுசுக்கு மனசுல இடம் வரும். இப்படியே
பேசிட்டிருந்தீங்கன்னா எப்படி உறவுக்காரங்கல்லாம் வந்து போவாங்க? மாப்பிள்ளைன்னு மரியாதையெல்லாம்
கேட்டு வாங்கறது இல்லை. நம்மோட நடத்தையில இருக்கு. குழந்தைகளையும் அவங்க தாத்தா பாட்டியிடம்
அப்பப்போ பழக விடலையின்னா எப்போ உறவு முறையெல்லாம் அவங்களுக்கு புரியும்? இந்த முறை
நான் என்னோட முடிவ மாத்திக்கப்போவது இல்லை" என்று தீர்மானத்துடன் கூறினாள் வசந்தி.
நமச்சிவாயம் கோபத்தின்
உச்சத்தில் இருந்தான். இது வரை வசந்தி தன்னுடைய வார்த்தையை மீறியது இல்லை. இப்போது
அவனுக்கு அதீதமான சந்தேகங்கள் உண்டாகத் தொடங்கின. "உனக்கு யாராவது இப்படி எதிர்க்க
சொல்லிக்குடுத்தாங்களா? நீ இப்போ நான் சொல்வதைக் கேட்காம அவங்க சொல்றதை செய்வதைப்பார்த்தா
ஏதோ உள்நோக்கமிருக்கு. நான் என்னோட டிக்கெட்ட கேன்சல் பண்ணிடறேன். நீங்க போயிட்டு வாங்க"
என்று மிரட்டினான்.
"நான் யாரிடமும்
பேசவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதாவது மனநல ஆலோசகரிடம்தான் நாம் போக வேண்டும்"
என்று ஆற்றாமையில் கூறினாள் வசந்தி.
தன்னை அறியாமல்
வெளியே வந்து விழுந்த வார்த்தைகள் அவை. ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த நமசிவாயம்
இப்பொழுது அவள் சொன்ன வார்த்தைகளால் மிகவும் கொதிப்படைந்து பின்னர் வீட்டின் வாயிற்
கதவை "டமார்" என்று அடைத்துவிட்டு வெளியேறினான். சென்ற ஐந்தாவது நிமிடம்
அடுக்குமாடிக் காம்பௌண்டின் காவலாளி வந்து மணியடித்தான். "ஐயா மயக்கமாயிட்டார்.
உடனே வாங்க " என்றான்.
வசந்தி உடனே ஆம்புலன்சுக்கு
போன் போட்டு அழைத்து உடனடி சிகிச்சைக்கு கம்பனியின் ஆஸ்தான ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்.
மருத்துவரீதியான பரிசோதனைகள் முடிந்தவுடன் முதற்சிகிச்சை செய்த மருத்துவர் ஒன்றும்
பயப்படுவதற்கில்லை என்று கூறியவுடன்தான் சற்று தெளிவானாள். பிறகு வந்து பார்த்த மூத்த
மருத்துவர், வசந்தியை தனியே அழைத்து "உங்க கணவருக்கு உடம்பில் ஒரு குறையும் இல்லை.
மனதில் தான் வியாதி. நான் என்னுடைய நெருங்கிய நண்பர் டாக்டர்.உதயமூர்த்திக்கு கடிதம்
எழுதிக் கொடுக்கிறேன். அவர் தலை சிறந்த மனநல மருத்துவர். உங்கள் பிரச்சினைக்கு முடிவு
அவரிடம்தான் உள்ளது. நாளையே சென்று பாருங்கள் என்றார்.
வெளியில் புலியாகப்
பாய்ந்தாலும் மனதளவில் பயன்தான்கொள்ளியான நமச்சிவாயம் மருத்துவரின் கருத்தை ஏற்று டாக்டர்.
உதயமூர்த்தியை காண சம்மதித்தான். சம்மதித்தான் என்ன சம்மதிக்கப்பட்டான். டாக்டருக்கு
வயது எழுபதைக் கடந்திருந்தாலும் பார்ப்பதற்கு ஐம்பது வயதே மதிக்கலாம். புன்னகையுடன்
வரவேற்ற டாக்டர், வசந்தியை அறைக்கு வெளியே
அமரச்செய்தார். பின் நமச்சிவயதுடன் பேச ஆரம்பித்தார்.
"உங்கள் வரலாற்றைப்பற்றி
சொல்லுங்கள்"
நமச்சிவாயம் தன்னுடைய
ஞாபகசக்தியை பயன்படுத்த ஆரம்பித்தான். ஆரம்பப்பள்ளியில்
அடி வாங்கியது முதல் வீட்டில் தனது அண்ணன் மற்றும் தம்பியுடன் போட்ட சண்டைகள், சாப்பிட்ட
பலகாரங்கள், பிடித்த/பிடிக்காத ஆசிரியர்கள்,
சந்தித்த மனிதர்கள்,பயங்கள், சந்தோஷங்கள் இவை தேதி நேரம் விடாமல் கூறினான். இரண்டு
மணி நேரம் கழித்து மிகவும் களைத்து விட்டான். டாக்டர் அவனை தன்னுடைய அறையிலேயே ஓய்வு
எடுத்துக்கொள்ள தகுந்த சாய்வு நாற்காலியைக் காண்பித்தார். அவன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான்.
பின்னர் வசந்தியை
உள்ளே அழைத்து மிக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். " உங்கள் கணவருக்கு ஒரு
வகையான ஹைபெர்தைமீசியா என்ற வியாதி உள்ளது. இது அவருடைய உயிருக்கு ஆபத்தானது அல்ல.
ஆனால் அவருடைய மன அழுத்தத்தை அதிகமாக்கக்கூடிய ஒரு பழக்கம். அவருடைய ஞாபகசக்தி அவருக்கு
பல வகையில் பலனளித்தாலும் வேண்டாத எண்ணங்களும் மூளையில் பதிவு செய்து மறக்காமல் வைத்துக்கொள்கிறது.
" நீங்கள் அவரிடம் பழையதையோ இல்லை பழைய மனிதர்களை பற்றியோ பேசினால்
அவருடைய மூளையிலிருந்து அந்த நினைவுகள் வெளியில் வந்து அழுத்தத்தைக் கொடுக்கும்."
தூங்குவதைப்போல
நடித்துக்கொண்டிருந்த நமச்சிவாயம் கண்களை மூடிக்கொண்டு காதைத் தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
டாக்டர் மேலும்
, "இவ்வகையான மனிதர்களுக்கு அல்சீமர் என்ற மறதி வியாதி கூடிய விரைவில் வரும் வாய்ப்பு
உள்ளது". இவர்கள் மூளையின் எந்தப் பகுதி மிகவும் உபயோகிக்கப்படுகிறதோ, மிக விரைவில்
அதனுடைய உயிரணுக்கள் (செல்) செயலிழந்து போய்விடும்.
அதனால் ஞாபகசக்தி என்னும் வலிமை, அவருடைய பலவீனமாக மாறும் வாய்ப்புள்ளது. நீங்கள் அவரை மிக ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.
அவரை மீண்டும் மூன்று மாதம் கழித்து அழைத்து வாருங்கள் என்று அறிவுரை கூறினார்".
நமச்சிவாயம் இதைக்கேட்டு
சொல்லொண்ணா அதிர்ச்சிக்கு உள்ளானான். கண்களை திறக்காமல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக
மறக்க முயற்ச்சித்தான்.
டாக்டர் பின்னர்
வசந்தியின் அலைபேசியில் தான் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததாகவும், அவள் கணவன் அவர்கள்
பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்ததால் வெகு விரைவில் பூரண குணமடைந்து விடுவார்
என்றும் வாக்குறுதி அளித்தார். வசந்தியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இப்பொழுதெல்லாம்
நமச்சிவாயம் முன் போல் இல்லை. பழைய நினைவுகள்
அனாவசியமாக அவனைத் தொந்தரவு செய்வதில்லை. கணினி மனிதன் டெலீட் செய்ய பழகிக்கொண்டான்.
%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment